தமிழ்நாட்டில் தற்போது வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சோதனை முயற்சியாக சென்னை தி.நகரில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சோதனை முயற்சியும் வெற்றி பெற்றுள்ளதால், சென்னையின் மற்ற பகுதிகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படவுள்ளன.
பொதுவாகவே, ஸ்மார்ட் மீட்டர்கள் மின்சாரத்தை துல்லியமாக கணக்கிட உதவும். தற்போது வரை மின்சாரத்தை கணக்கிட மின்வாரிய ஊழியர்கள் வீட்டுக்கு நேரில் வந்து அளவீடு செய்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் விவரங்களை பொறுத்தே, மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது. ஆனால், ஸ்மார்ட் மீட்டர் வந்துவிட்டால், நாம் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தியிருக்கிறோம் என்பது நமக்கு காட்டுவது மட்டுமின்றி, மின்சாரத்துறை அலுவலகத்திற்கும் தெரியும். இதனால் மின்சார ஊழியர்கள் வீட்டிற்கு வராமலே அளவு எடுக்க முடியும். மேலும், இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் துல்லியமாக கணக்கிட்டு, கட்டணம் நிர்ணயம் செய்வதால், தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.
இந்நிலையில்தான் சென்னை மாநகராட்சி மெட்ரோ குடிநீர் இணைப்பில் புதிதாக ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தண்ணீர் பயன்படுத்தும் அளவை கணக்கிட இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இந்த மீட்டர்களை பொருத்த மெட்ரோ வாட்டர் திட்டமிட்டுள்ளது. இதனால், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், விரைவில் தண்ணீருக்கு பணம் செலுத்துவார்கள்.
தற்போது, மக்கள் மீட்டர் இல்லாத தண்ணீருக்கு மாதந்தோறும் ரூ.84 கட்டணமாக செலுத்தி வருகின்றனர். எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தினாலும் இந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடைகளில் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது 24,000 ஸ்மார்ட் மீட்டர்கள் வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கட்டணம் வசூல் சரி செய்யப்பட்டு 2021-22ஆம் ஆண்டு ரூ.57 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இனி வரும் நாட்களில் குடியிருப்பு கட்டிடங்களிலும் இதேபோல் மீட்டர்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.