கோடைக்காலத்தில் உடலை குளுமையாக வைத்துக்கொள்ளும் வகையில் வீட்டிலேயே எளிய முறையில் வாட்டர் மெலன் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
கோடைக்காலம் தொடங்கினாலே ஆங்காங்கே எங்கு பார்த்தாலும் தர்பூசணிக் கடைகள் களைகட்டும். அதுவும் தற்போது அடிக்கும் வெயில் தாகத்தைத் தவிர்க்க தர்பூசணியின் தேவையை இன்னும் அதிகரித்துவிட்டது. 92 சதவீதம் தண்ணீரை உள்ளடக்கிய தர்பூசணி, உடலில் நீர் ஏற்றத்தை அதிகரிக்க உதவும். இருப்பினும், இந்த கோடை சீசனை எதிர்க்கொள்ளவும் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் ஐஸ்கிரீம், ஜூஸ், பழங்கள் உள்ளிட்டவைகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள்.
ஆனாலும் குழந்தைகளுக்கு மத்தியில் வெயில் கால ஃபெவ்ரைட் என்று சொன்னால் அது ஐஸ்கிரீம் என்பதில் மிகையாகாது. ஐஸ் க்ரீம் என்றதும் வெளியில் சென்று சுவைக்க வேண்டும். இல்லையேல் கடைகளில் இருந்து வாங்கி வீட்டிற்கு சென்று சாப்பிட வேண்டும் என்று குழந்தைகள் நினைப்பார்கள். எனவே, சுலபமாக கிடைக்கும் தர்பூசணியை வைத்து வீட்டிலேயே ஐஸ்கிரீம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
* தர்பூசணி துண்டுகள் – 1 கப்
* கன்டென்ஸ்டு மில்க் 1/2 கப்
* பிரஷ் க்ரீம் – 1 ஸ்பூன்
* ரோஸ் எசன்ஸ்- 2 துளி
* பொடித்த நட்ஸ் – சிறிது
செய்முறை :
* முதலில் தர்பூசணி பழத்தின் தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு பழத்தினை மட்டும் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர், மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து அதனுடன் சிறிது பிரஷ் கிரீம் சேர்த்து ஒரு சுற்று சுற்றிக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து ஒரு முறை மீண்டும் சுற்றி எடுத்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அரைத்ததை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு அதில் சிறிது ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
* பின் இந்த பௌளை ஃபிரீசரில் சுமார் 5 மணி நேரம் வைக்க வேண்டும்.
* பின் கெட்டியாக மாறிய பிறகு ஃபிரீசரிலிருந்து எடுத்து ஸ்கூப் அல்லது குழிக் கரண்டி வைத்து எடுத்து சிறிய அளவிலான கிண்ணங்களில் வைத்து அதன் மேல் பொடித்த நட்ஸ் சில தூவினால் டேஸ்டான தர்பூசணி ஐஸ்கிரீம் ரெடியாகிவிடும்.