பட்டர் சிக்கன் மற்றும் தால்மக்கானி ஆகிய உணவு வகைகளை உருவாக்கியவர் யார் என்பது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசைவ விரும்பிகளிடம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் உணவு வகைகளில் ஒன்று பட்டர் சிக்கன். இதே போல் சைவ பிரியர்கள் இடையே தால் மக்கானி என்ற உணவு வகை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு உணவு வகைகளையும் முதல் முதலாக தயாரித்தவர் டெல்லியை சேர்ந்த முன்னாள் சமையல்கலை நிபுணரான கந்தன் லால் குஜ்ரால் என பொதுவாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.
கடந்த 1950ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள பிரபல உணவகமான மோதி மஹால் ரெஸ்டாரண்டில் பணியாற்றி வந்த போது குஜ்ரால் இதை தயார் செய்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் தாரியாகஞ்ச் என்ற உணவக உரிமையாளர்கள், தங்களது இணையதளத்தில் இந்த உணவு வகைகளை உருவாக்கியது தாங்கள்தான் என விளம்பரம் செய்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், இந்த 2 உணவு வகைகள் இரண்டையும் உருவாக்கியது தாங்கள் தான் என உத்தரவிடக் கோரி, மோதி மஹால் உணவகம் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, மோதி மஹால் உணவகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சந்தீப் சேத்தி, மோதி மஹால் நிறுவனத்தில் உருவாக்கிய உணவு வகைகளை குஜ்ராலின் பெயர் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு, தங்களுடையது என தாரியாகஞ்ச் உணவகம் விளம்பரப்படுத்தி வருவதாகவும், இது தங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் வாதிட்டார்.
மேலும், மோதி மஹால் உணவக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்த புகைப்படங்களை எடுத்து தாரியாகஞ்ச் தரப்பினர் விளம்பரப்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இந்த வழக்கு உணவு பிரியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.