தென்காசி மாவட்டம் திருவேங்கடம் என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் ரகுபதி (61). தொழிலதிபரான இவர் திருவேங்கடத்தில் மெடிக்கல் மற்றும் கல்குவாரியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். குண்டம்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் துளசி மணி. இவரது மனைவி மகேஷ்வரி(43). இவர் தொழிலதிபரான ரகுபதி வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில், மகேஷ்வரி மீதுள்ள நம்பிக்கையில் அவரிடம் வீட்டு சாவியை கொடுத்து விட்டு ரகுபதி தனது குடும்பத்துடன் வெளியூர் செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று ரகுபதியின் மனைவி பீரோவை திறந்து நகைகளை பார்த்த போது நகைகள் காணாமல் போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து ரகுபதி,ச் மகேஷ்வரியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் நகையை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, திருவேங்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது மகேஸ்வரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பணிப்பெண் மகேஸ்வரி தனது கணவர் துளசிமணியுடன் சேர்ந்து திட்டம் தீட்டி நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டுள்ளார். பின்னர் மகேஸ்வரியின் வீட்டில் இருந்து நகைகளை மீட்ட போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரி, அவரது கணவர் துளசிமணி ஆகியோரை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.