கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர்கள் ஜனார்த்தனா (22). இவர், அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில், இருவரும் குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு பிறகு ஜனார்த்தனனின் கர்நாடகாவை சேர்ந்த நண்பர்கள் 2 பேர், வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர்.
அவர்களும் ஜனார்த்தனா மற்றும் எலன்மேரி இருந்த அறையிலேயே தங்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி இரவு வேளாங்கண்ணி ரயில் நிலையம் அருகே ஜனார்த்தனா சடலமாக கிடந்துள்ளார். மேலும், அவர்களின் நண்பர்கள் இருவரும் ரயில் மூலம் தப்பிச்செல்ல முயன்றனர். ஆனால், தகவல் அறிந்து, அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணையில், ஜனார்த்தனாவின் நண்பர்கள் பெங்களூரு சிவமொக்கா பகுதியைச் சேர்ந்த ஜீவன் (19) மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது. ஜனார்த்தனாவும், காதலி எலன்மேரியும் ஒரே கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு இடையே எலன்மேரி, ஜீவனையும் காதலித்து வந்துள்ளார். ஒரே நேரத்தில் 2 பேரை எலன்மேரி காதலித்து வந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எலன்மேரிக்கு வேறு ஒருவருடன் தருமபுரியில் திருமணம் நடந்துள்ளது.
அதன் பிறகு இரண்டாவதாக ஜனார்த்தனாவை எலன்மேரி காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், எலன்மேரிக்கு ஜனாத்தனாவின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், 3-வதாக ஜீவனை கரம்பிடிக்க முடிவு செய்துள்ளார். இதற்கு ஜனார்த்தனா தடையாக இருந்ததால் அவரை திட்டம் தீட்டி கொலை செய்துள்ளனர். எனவே, இந்த வழக்கில் காதலி எலன்மேரி, ஜீவன் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.