ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழகத்தில் ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.45 வரை உயர்த்தப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில், ஏழை மக்களை பாதிக்கும் வகையிலான இந்த விலை உயர்வு நியாயமற்றது. ஏற்றுக்கொள்ள முடியாதது. கடந்த மார்ச் மாதத்தில் தான் ஆவின் நெய், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டன. அதன்பின் 4 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், மீண்டும் ஒரு விலை உயர்வை தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
தயிருக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது தான் இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. 5 சதவீதம் மட்டும் வரி விதிக்கப்பட்ட நிலையில், 20 சதவீதம் விலையை உயர்த்துவதும், நெய் மீதான வரி உயர்த்தப்படாத நிலையில், அதன் விலையையும் அரசு உயர்த்துவதும் எந்த வகையில் நியாயம்? குஜராத்தின் அமுல், கர்நாடகத்தின் நந்தினி போன்ற பால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு பெறப்பட்டுள்ள நிலையில், அதே போல் ஆவினுக்கும் பெற வேண்டுமே தவிர விலையை உயர்த்தக் கூடாது. விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.