வங்கித் துறையில் தற்போது வேலையிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், கடந்த 6 மாதங்களில் வங்கித் துறையில் வேலையை விட்டு வெளியேறும் விகிதம் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் வங்கித் துறையும் மிக முக்கியமான ஒன்று. குறிப்பாக, தனியார் வங்கித் துறையில் ஒவ்வொரு ஆண்டும் நிறைய இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஆனால் வங்கித் துறையில் தற்போது வேலையிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கையில், கடந்த 5 வருடங்களாக நிறைய இளைஞர்கள் தனியார் வங்கித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றனர். தனியார் வங்கித் துறையில் இளைஞர்கள் விரைவாக வேலையை விட்டு வெளியேறிவருகின்றனர். அதாவது, கடந்த 6 மாதங்களில் வங்கித் துறையில் வேலையை விட்டு வெளியேறும் விகிதம் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சில தனியார் வங்கிகளில் ஊழியர்கள் மிக வேகமாக வேலையை விட்டு வெளியேறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி தகவல் அளித்துள்ளது. இத்தகவலை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து கண்காணித்து வருவதாகவும், இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனியார் துறை வங்கிகளில் அதிகமாக இளைஞர்கள் வெளியேறும் வங்கிகளை தீவிரமாகக் கண்காணிக்க, ரிசர்வ் வங்கியால் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது என்றும் இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி (GDP) புள்ளி விவரங்கள் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.