சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடியது. பேரவை தொடங்கியதுமே முன்னாள் உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, அதிமுக ஆட்சியில் ரூ.1,296 கோடியில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரை மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டதாக தெரிவித்தார். அந்த பணி இன்று ஆமை வேகத்தில் நடக்கிறது என்றும், கழிவுநீரும், குடிநீரும் கலந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, ‘கம்பத்திலிருந்து மதுரைக்கு நீர் கொண்டு செல்லும் பணியை நீங்கள் ஆரம்பித்தாலும், கிணறு தோண்டும் அனுமதியை பெறாமல் இருந்தீர்கள். இன்னும் 15 கி.மீ. தான் மீதமுள்ளது. மதுரைக்கு இன்னும் 15 நாட்களில் 160 எம்.எல். குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்’ என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ‘செல்லூர் ராஜூ கேட்கும் தண்ணீர் நிச்சயம் வழங்கப்படும். அணையில் தண்ணீர் வீணாகாமல் இருக்க தெர்மாகோல் போட்டு மூடி வைத்துள்ளோம்’ என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.