காசா எல்லைப்பகுதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 7ஆம் தேதி, காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதலை நடத்த தொடங்கினர்.
இந்த தாக்குதலில் இஸ்ரேல் திக்கு முக்காடிப்போனது. ராக்கெட் மழை பொழிந்து ஒருபக்கம் தாக்குதல் என்றால் மற்றொரு பக்கம் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி சரமாரி தாக்குதலை தொடுத்தனர். இதையடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரை அறிவித்த இஸ்ரேல், தாக்குதலை தீவிரப்படுத்தியது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது.
இந்த தாக்குதலில் தற்போது வரை இருதரப்பையும் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 6,000 பேர் காயமடைந்துள்ளனர். குழந்தைகள், பெண்களும் பலியாகி உள்ளதோடு, ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே, காசா எல்லைப்பகுதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.