மாணவி ஸ்ரீமதி விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி, கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17ஆம் தேதி பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை அடித்து உடைத்து பலர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவியின் வீட்டிற்கு சென்று அவரது தாய் செல்வியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். எந்த கொம்பனாக இருந்தாலும் தண்டனை நிச்சயம் கிடைக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தாயின் வேதனையை புரிந்து கொள்ள முடிகிறது. முதல்வரும் மாணவி ஸ்ரீமதியின் தாயாரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். மாணவி வழக்கில் நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறோம்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.