ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டு எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என்று பல அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதை பயன்படுத்திய பாஜ மேலிடம் அவர்களின் மேல் உள்ள ஊழல் வழக்குகளை காட்டி மிரட்டி தங்கள் எடுக்கும் முடிவுக்கு பணிய வைத்து வருகிறது. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் அதிமுக கூட்டணி வேண்டாம் என்பது போல பேசத்தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் ‘ஜெயலலிதாதான் மிகப்பெரிய ஊழல் முதல்வர். ஜெயலலிதாவைவிட என் மனைவி வலிமையானவர்’ என்று அண்ணாமலை விமர்சனம் செய்தார். இதற்கு அதிமுகவினர் பொங்கி எழுந்தனர். இதையடுத்து அண்ணாமலையை அழைத்து டோஸ்விட்ட அமித்ஷா, எடப்பாடியுடன் இணைக்கமாக செல்ல அறிவுறுத்தினார். அதன்பின் அதிமுகவை பற்றி பேசாமல் இருந்த அண்ணாமலை, சமீபத்தில் அண்ணாவைப் பற்றி அவதூறாக பேசியதால் மீண்டும் மோதல் தொடங்கியது.
அதாவது, “கடந்த 1956ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரை கடவுளை கிண்டல் செய்ததால் முத்துராமலிங்க தேவர் கோபமடைந்து, இனி கடவுளை யாராவது கேலி செய்தால் ரத்தத்தில் மீனாட்சியம்மனுக்கு அபிஷேகம் நடக்கும் என எச்சரித்தார். இதன் காரணமாக அறிஞர் அண்ணா முத்துராமலிங்க தேவருக்கு பயந்து அவரிடம் மன்னிப்பு கேட்டு சென்னைக்கு வந்துவிட்டார்” என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், அதிமுக-திமுக தலைவர்கள் அதற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், அண்ணா தொடர்பாக 1956ஆம் ஆண்டு இந்து நாளிதழில் வெளியான செய்தியையே தான் கூறுவதாக அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், இந்து குழுமம் அப்படியான எந்த செய்தியையும் தாங்கள் வெளியிடவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.