”வெற்றி பெறுவதற்கான தகுதி சீமானிடம் இல்லை” என்று நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் பரபரப்பு பேட்டி அளித்துள்ளனர்.
சீமானின் நடவடிக்கைகள் பிடிக்காமல் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய வெற்றிக்குமரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வெற்றிக்குமரன், ”சீமானின் மோசமான நிர்வாக திறமையால், ஆட்சியை கைப்பற்ற வேண்டிய நாம் தமிழர் கட்சி, தற்போது அதை இழந்து நிற்கிறது.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய அனைவரும் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைய முடிவு செய்துள்ளோம். சீமானிடம் நிர்வாக திறன் அறவே இல்லை. சீமானுக்கு, எப்போதுமே பேசு பொருளாக தாம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற மனநோய் இருக்கிறது. கட்சியில் உள்ளவர்களின் உழைப்பையும், பொருளாதாரத்தையும் சுரண்டி தனது சொந்த வாழ்க்கைக்காக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
வெற்றி பெறுவதற்கான தகுதி சீமானிடம் இல்லை. தைரியமான ஆளாக இருந்தால், தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை சீமான் வெளியிட வேண்டும். ரஜினிகாந்தை சந்தித்து விட்டு வந்த பிறகு சீமானின் நிலைப்பாடு மாறியிருக்கிறது. ஹெச்.ராஜாவை பேரறிஞர் என்று கூறியுள்ளார். இதனால், சீமான் பின்புறத்தில் யாருக்கோ இயங்கி வருகிறார். சீமானின் பின்னால் யார் இருக்கிறார்கள்..? சீமானை யார் செயல்பட வைக்கிறார்கள் என்ற தகவல் விரைவில் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும். பெரியாரை நாங்கள் எதிர்க்கும் நிலைப்பாட்டில் இல்லை. அதேபோல் பிரபாகரன் உடனான சந்திப்பை, சீமான் மிகைப்படுத்தியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.