இயக்குனர் சந்திரசேகர் தன்னுடைய மகன் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பேட்டியளித்துள்ளார்.
அவர் பேசுகையில், ”நானும் விஜய்யும் இளம் பருவத்தில் இருந்தே அதிகமாக பேசிக் கொள்ள மாட்டோம். காலேஜிலிருந்து வந்து விட்டாயா? என்று சாதாரணமாக தான் நாங்கள் பேசிக்கொள்வோம். விஜய், நானும் அதிகமா பேசமாட்டோம். இப்போ அவர் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து விட்டதால் எல்லோரும் அவரை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். விஜய் அவருடைய அப்பாவிடம் சரியாக பேசவில்லை என்று சிலர் கூறி வருகின்றனர்.
ஆனால், உண்மை அதல்ல. விஜய் ஆசைப்பட்டதால் தான் அவரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தேன். நான் இயக்குனரான பிறகு கருணாநிதி, ஜெயலலிதா என அனைவருமே என்னுடைய நண்பர்கள்தான். எல்லோருமே என்னை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர். ஆனால், எனக்கு என் மகன் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற ஆசை இருந்தது.
அவருக்காக ரசிகர் மன்றம் ஆரம்பித்து அதனை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றியது எல்லாமே நான்தான். ஆனால், அவரிடம் என்னுடைய அரசியல் ஆசையை நான் சொன்னது இல்லை. இப்போது அவராகவே அரசியலுக்கு வந்து சமூக உணர்வுகள் உள்ள மனிதராக மாறிவிட்டார். தன்னை உயர்த்திய தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார்” தெரிவித்துள்ளார்.