உண்மையான போராட்டம் என்னவென்பது குறித்து இரண்டு மாதங்களில் விஜய் காண்பிப்பார் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக, பொதுக்குழு உறுப்பினர்களுடன் விஜய் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “நாங்கள் களத்தில் போராட்டம் நடத்தவில்லை என விமர்சிக்கும் நீங்கள் என்ன போராட்டம் நடத்தியுள்ளீர்கள்..? உண்மையான போராட்டம் என்னவென்பது குறித்து இரண்டு மாதங்களில் விஜய் காண்பிப்பார். அண்ணா நடத்தியதைப் போல தவெகவினர் போராட்டம் இருக்கும். இன்னும் இரண்டே மாதம் காத்திருங்கள்; உண்மையான போராட்டத்தை காண்பிக்கிறோம். கூட்டணி குறித்து விஜய்க்கே முழு அதிகாரம்; அவர் நல்ல முடிவெடுப்பார். இன்னும் இரண்டு மாதங்களில் மக்கள் வழியில் முடிவெடுப்பார் விஜய்.
Get Out Modi என்று சொல்லும் அவர்கள் மோடி வரும்போது வெள்ளை குடை பிடித்து வரவேற்பு அளிக்கின்றன. அதிமுகவினர் நேரடியாக பாஜகவுடன் கூட்டணி வைத்தனர். ஆனால், அதை விட மோசமாகவும், மறைமுகமாகவும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. இருமொழிக் கொள்கை என்பது முன்னாள் முதல்வர் அண்ணா உருவாக்கியது” என்றார்.