2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “இரும்பு மனிதன் என்று போற்றப்படும் முதலமைச்சரின் பிறந்த நாளை மக்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்களின் வாழ்வாதாரம் சிறக்க நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு முதல்வர் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இல்லாமை என்பது இல்லாமலே போய்விட்டது. ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் அன்னதான பிரபு எங்கள் தமிழக முதல்வர். தமிழக கோயில்களில் ஆண்டுக்கு 3 கோடியே 50 லட்சம் பேர் அன்னதான திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.112 கோடி செலவாகிறது “என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நலத்திட்டங்கள் நடைபெறுவதையும், திருக்கோவில்களில் பக்தர்கள் எண்ணிக்கை கூடுவதையும், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதையும் அண்ணாமலை போன்றவர்களுக்கு எப்படி வயிற்று எரிச்சலை கிளப்பாமல் இருக்கும்..? ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்தவர்கள் இப்படி ஏதாவது பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். திமுக இயக்கம் காய்ச்ச காய்ச்ச மெருகு ஏறும் இயக்கம்.
அண்ணாமலை முதலில் சட்டமன்றத் தேர்தலில் நிற்கட்டும். அதே சட்டமன்றத் தொகுதியில் திமுகவின் கடைகோடி தொண்டனை நிறுத்தி, அண்ணாமலையை வீழ்த்துவோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என சவால் விட்டுள்ளார்.
Read More : கனவு மூலம் விஜய் கட்சியில் இணைய அட்டனென்ஸ் போட்ட பார்த்திபன்..!! அவரே வெளியிட்ட பரபரப்பு பதிவு..!!