தமிழ்நாட்டின் அஞ்சலகங்களில் செல்வ மகன், செல்வ மகள் சேமிப்பு திட்டங்களில் சேர நவம்பர் 30ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
செல்வமகள் சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட திட்டமாகும். பெண் குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்ட இத்திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ஒரு நிதியாண்டிற்கு ரூ.250 முதல், அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
மொத்தம் 15 ஆண்டுகளுக்கு பணத்தை டெபாசிட் செய்யலாம். 21 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது 18 வயதை அடைந்த பிறகு இத்திட்டம் முதிர்ச்சியடைந்துவிடும். 18 வயதை எட்டியதுமே, அவர்களின் கல்விச் செலவுக்கு இந்த முதலீட்டில் இருந்து பாதி தொகையை எடுத்துக்கொள்ளலாம். முதலீடு மற்றும் வட்டிக்கு 100% பாதுகாப்பு என்பதுடன், அதிக வட்டி கிடைக்கிறது என்பதால் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவையும் இந்த திட்டம் பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து அஞ்சலகங்களிலும் செல்வ மகள், செல்வ மகன் சேமிப்புத் திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கு சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றன. கடந்த 14ஆம் தேதி முதல் இந்த சிறப்பு முகாம்கள் மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. நவம்பர் 30ஆம் தேதி வரை செல்வ மகள், செல்வ மகன் சேமிப்புத் திட்டத்தில் சேர கணக்கு தொடங்கிக் கொள்ளலாம்.