West Nile virus: அதிகரித்து வரும் வெஸ்ட் நைல் காய்ச்சலுக்கு மருந்துகளோ, தடுப்பூசிகளோ இல்லை என்பதால் கூடுதல் விழிப்புடன் இருக்க கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் கோழிக்கோடு, மலப்புறம், திருச்சூர் மாவட்டங்களில் 10 பேருக்கு வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile virus) காய்ச்சல் பரவி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அதில் ஒருவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் ரத்தம், மற்றும் முதுகெலும்பில் தண்டுவடத்தில் இருந்து ஊசி மூலம் திரவம் எடுக்கப்பட்டு, அவற்றை மெடிக்கல் காலேஜ் மைக்ரோ பயாலஜி பிரிவின் வைரஸ் ரிசர்ச் அண்ட் டைக்னோஸ்ட்ரிக் லேபாரட்டரியில் பரிசோதனை நடத்தியபோது, அது வெஸ்ட் நைல் காய்ச்சல் என தெரியவந்துள்ளது. மேலும், அவர்களது மாதிரிகள் புனே நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைரலாஜிக்கு அனுப்பப்பட்டதில், அது வெஸ்ட் நைல் காய்ச்சல் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், தலைவலி, வலிப்பு, மயக்கம், கை, கால்கள் தளர்ந்துபோதல் உள்ளிட்டவை வெஸ்ட் நைல் காய்ச்சலுக்கான அறிகுறிகள். மேலும், மூளைக்காய்ச்சல் ஏற்படுவது போன்ற சில அறிகுறிகளும் தென்படுவதால், இது வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு எனத் தெரியாமல், சிலருக்கு மூளை காய்ச்சலுக்கான மருத்துவம் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கியூலக்ஸ் (Culex) கொசுக்களால் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவுகிறது. அதே சமயம், ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு இந்த நோய் பரவாது. இந்த நோய் பாதித்த கால்நடைகள், பறவைகள் ஆகியவற்றை கடித்த கொசுக்கள் மனிதரை கடித்தால் அவர்களுக்கு இந்த வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்தக் காய்ச்சல் எளிதில் பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மலப்புறம், கோழிக்கோடு, திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வெஸ்ட் நைல் காய்ச்சலை பொறுத்தவரையில் கொசுவில் இருந்து பரவுகிறது. எனவே, கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை உடனடியாக அழிக்க வேண்டியது முக்கியமானது.
கடந்த வாரம் நடந்த சுகாதாரத்துறை உயர் மட்டக்குழு கூட்டத்தில், மழைக்கால சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறேன். நடவடிக்கைகளை இன்னும் வேகப்படுத்துவதற்காக அந்த மாவட்ட மெடிக்கல் ஆஃபீஸர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
1937-ம் ஆண்டு உகாண்டாவில் இந்த வைரஸ் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 2011-ல் ஆலப்புழாவில்தான், கேரளாவில் முதன்முறையாக இந்தக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டது. தலைவலி, காய்ச்சல், தலைச்சுற்றல், ஞாபக மறதி உள்ளிட்டவை முக்கியமான அறிகுறிகள். பலருக்கும், இந்த நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கும். சிலருக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்.
இந்த காய்ச்சலுக்காக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவுக்கான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஜப்பான் காய்ச்சலுக்கு இணையான அறிகுறிகள் இந்த காய்ச்சலுக்கும் காணப்படும். ஆனால், ஜப்பான் காய்ச்சல் போல இந்த நோய் தீவிரமடையாது. ஆனாலும், முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை உடனடியாக அழிக்க வேண்டும். தனி நபர்கள் தங்கள் வீடுகளிலும், வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தேங்காமல் கவனிக்க வேண்டும். கியூலக்ஸ் கொசுக்கள் மூலம் பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சல் ஜப்பான் காய்ச்சலைப்போன்று ஆபத்தானது இல்லை. ஜப்பான் காய்ச்சல் சாதாரணமாக 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். வெஸ்ட் நைல் காய்ச்சல் முதியவர்கள் மத்தியில் காணப்படுகிறது. இரண்டுமே கொசுக்கள் மூலமாகப் பரவும் காய்ச்சல்.
ஜப்பான் காய்ச்சலுக்குத் தடுப்பூசி உள்ளது. வெஸ்ட் நைல் காய்ச்சலுக்கு மருந்துகளோ, தடுப்பூசிகளோ இல்லை. உடனடி சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைதான் முக்கியமானது. கொசுக்கள் கடிக்காமல் தப்பித்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. உடல் முழுவதையும் மறைக்கும் விதமாக ஆடை அணிய வேண்டும். கொசுவலை உபயோகிக்க வேண்டும். கொசு விரட்டிகள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.