பெண்களை இழிவாக பேசி அல்லு சில்லு நடிகர்களைப் போல் மட்டமான, கேவலமான செயல் செய்யும் நீங்கள், அரசியலுக்கு வந்து என்ன கிழிக்கப் போறீங்க? என்று நடிகர் விஜய்க்கு மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் ஆயிரம் காரணம் கூறினாலும் அவர் பேசியவார்த்தையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை விடுத்துள்ள பதிவில், ”நடிகர் விஜய்யின் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சினிமா நடிக்கட்டும், பணம் சம்பாதிக்கட்டும் என்னவோ பண்ணட்டும் அதில் எந்த பிரச்சனையும் யாருக்கும் இல்லை.
அரசியலுக்கு வரப்போகிறேன் என்று தன்னுடைய ரசிகர்களை வைத்து டாக்டர் திரு.பி.ஆர். அம்பேத்கர் போன்றவர்களை முன்னிருத்தும் நீங்கள், லியோ படத்தின் ட்ரெய்லரில் பெண்களை தவறான வார்த்தையில் சித்தரிக்கும் வார்த்தையை கூறி பெண்களை இழிவு செய்வது நியாயமா?
இதுதான் நீங்கள் கற்றுக்கொண்ட ஒழுக்கமா? கடுமையான வார்த்தைகளில் கூறி தான் ஆக வேண்டும். உங்கள் வீட்டிலும் பெண்ணாக உங்களுடைய தாய், மனைவி, மகள் உள்ளார்கள்.
அவர்களையும் அந்த வார்த்தைகளில் தான் நீங்கள் அழைப்பீர்களா?
படத்திற்கு வசனம் தேவைப்பட்டால் எவ்வளவோ வார்த்தைகள் தமிழ் மொழியில் இருக்கின்றன. விளம்பர நோக்கத்திற்காக அல்லு சில்லு நடிகர்களைப் போல் மட்டமான, கேவலமான செயல் செய்யும் நீங்கள் உங்களை பின் தொடரும் ரசிகர்களை எவ்வாறு வழி நடத்துவீர்கள்? பெண்களை மதிக்காத நீங்கள் அரசியலுக்கு வந்து என்ன கிழிக்க போகிறீர்கள். சினிமாவுக்காக தான் அந்த வார்த்தையை கூறினேன் என்று நீங்கள் நாளைக்கு உங்கள் மக்கள் தொடர்பு நிர்வாகியை வைத்து சப்ப கட்டு கட்டலாம். அந்த வார்த்தை எவ்வாறு நீங்கள் நியாயப்படுத்த முடியும். ஒரு இழிவான விஷயத்தை சொல்வதற்கு பெண்களின் உறுப்புகளை தான் குறிப்பிட வேண்டுமா?
நீங்கள் ஆயிரம் காரணம் கூறினாலும் நீங்கள் பேசிய வார்த்தையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது உண்மையில் உங்களுக்கு பெண்கள் மீது மரியாதை இருந்தால் உடனடியாக பெண்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் மன்னிப்பு கேட்க வைக்கப்படுவீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.