இளம் வயதில் பருவமடைவது என்பது இயல்பான ஒன்று தான். ஆனால், சமீப காலமாக இயல்புக்கு மாறாக மாதவிடாய் குறித்த புரிதலே இல்லாத குழந்தைகள் பருவமடைவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. குழந்தைப் பருவத்தில் இருக்கும் ஒரு பெண் குழந்தை, தன்னுடைய அடுத்தடுத்த வளர்ச்சியால் இயல்பான மாற்றங்களை எதிர்கொண்டு, இளம் வயதில் பூப்பெய்துகிறாள். தங்கள் வீட்டுப் பெண் குழந்தை எதிர்கால வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டாள் என்பதை உணர்த்துவதற்காக கிராமப்புறங்களில் பருவமடைதலை பூப்புனித நீராட்டுவிழா என வெகு விமா்சியாக கொண்டாடுகின்றனர்.
ஆனால், இதில் அதிர்ச்சி என்னவென்றால் சமீப காலமாக இந்த விழா மேடைகளில் வீற்றிருப்பவர்களில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆம், மாதவிடாய் குறித்த புரிதல் இல்லாத பல ஆண்களுக்கு, அது குறித்த புரிதலை ஏற்படுத்த இன்றளவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படும் இதே சமூகத்தில்தான் 7 முதல் 10 வயது குழந்தைகளும் தங்கள் முதல் மாதவிடாயை சந்திக்கிறார்கள். அண்மையில் டெல்லியில் 7 வயது பெண் குழந்தை தனது முதல் மாதவிடாயை சந்தித்திருக்கிறார். நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள். அந்த வயதில் நீங்கள் என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்? மழலை மனம் மாறாமல் குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடி கொண்டிருந்திருப்பீர்கள். அப்படி விளையாட வேண்டிய ஒரு குழந்தை மாதவிடாயின்போது எத்தனை வலியை சந்தித்திருப்பார். பெங்களூருரிலும் 8 வயதில் ஒரு சிறுமி பருவமடைந்திருக்கிறார்.
அமெரிக்காவில் சராசரியாக 15% சிறுமிகள் 7 வயதிற்குள்ளும், 28% சிறுமிகள் 8 வயதிலும் தங்களது முதல் மாதவிடாயை சந்திக்கின்றனர். அதிகமான எண்ணிக்கையில் ஸ்பெயின் சிறுமிகள் 9 வயதிலும் 10 வயதுடைய இந்தியச் சிறுமிகளும் பருவமடைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி விரைவில் பருவமடைவது குழந்தைகளின் மனநிலையைக் கடுமையாகப் பாதிக்கிறது. குழந்தைப் பருவத்திலேயே அவர்களின் பொறுப்பு கூடிவிடுகிறது. பருவமடையும் வயதிற்கு முன்பே நாப்கின்களை கையாளும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். தனிமைப்படுத்தப்பட்டது போன்ற உணர்வை எதிர்கொள்வார்கள். சக குழந்தைகள் அவர்களின் சூழலை புரிந்துகொள்ளாமல் போகும் நிலையும் ஏற்படும் என்று மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தியாவதால் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் எனவும், அதி விரைவில் பூப்பெய்தும் குழந்தைகள், ஆரம்பத்தில் தனது சம வயதுக் குழந்தைகளைவிட உயரம் அதிகமாக இருப்பதைப்போலத் தெரிந்தாலும், விரைவாகவே எலும்புகளின் வளர்ச்சி முழுமையடைந்துவிடுவதால், அவர்களின் உயரம் சற்றுக் குறைவாக இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இதற்கெல்லாம், வாழ்க்கைமுறை மாற்றம் தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. துரித உணவுகளை அதிகம் உட்கொள்வது, புரோட்டின், பால் உணவுகள் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது, பதப்படுத்தப்பட்ட உணவு, ரசாயனம் கலந்த நொறுக்குத் தீனி போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால், அவர்களின் உடல் எடை கூடுகிறது. உடல் பருமன் விரைவில் பருவமடைவதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இதுதவிர சிறுவயதில் பாலியல் ரீதியிலான கொடுமைகளுக்கு ஆளாகும் குழந்தைகளின் ஹாா்மோன்கள் தூண்டப்பட்டு விரைவில் இம்மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். வாழ்க்கை முறை மாற்றத்தால் குழந்தையின்மையும் அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படி 6ல் ஒருவர் குழந்தையின்மை பிரச்சனையை சந்திக்கிறார்களாம். எதிர்காலத்தில் நம் குழந்தைகள் இதுபோன்ற பிரச்சனையை சந்திக்காமல் இருக்க வேண்டுமென்றால் நம் வாழ்க்கை முறையை நாம் மாற்றித்தான் ஆக வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம் கொண்டு வயதிற்கு அதிகமான மார்பக வளர்ச்சி, ரோமங்கள் போன்றவை தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அவர்களின் உடல் பருமனை அளவோடு வைத்துக்கொள்வது பல நோய்களைத் தடுக்கும்.
Read More : டிஎன்பிஎஸ்சி 2025ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு..!! குரூப் 1, குரூப் 2 தேர்வுகள் எப்போது..?