Kejriwal: கடந்த 21ஆம் தேதி, 2021 ஆம் ஆண்டு டெல்லியில் அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 9 முறை சம்மன் அனுப்பப்பட்டும் ஆஜராகாத நிலையில் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்நிலையில் அவரை வரும் ஏப்.15 வரை நீதிமன்றக்காவலில் திகார் ஜெயிலில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை தற்போது மோசமடைந்திருப்பதாகவும், அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து சுமார் 4.5 கிலோ எடை குறைந்திருப்பதாகவும் ஆம் ஆத்மி தலைவர் பகீரங்கமாக தெரிவித்துள்ளார். டெல்லி அமைச்சரான ஆதிஷி இதுகுறித்து அவரது X பதிவில்,”அவரின் உடல்நிலை கவலைக்குரியதாக இருந்தாலும், அவர் நாட்டுக்காக மணிக்கணக்காக உழைத்தார்.
கைதானதில் இருந்து தற்போது வரை 4.5 கிலோ உடல் எடை அவருக்கு குறைந்துள்ளது. இது கவலைக்கொள்ள செய்கிறது. அவரின் உடல்நிலையை பாஜக இன்னும் மோசமாக்குகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏதும் நடந்தது என்றால், இந்த நாடு மட்டுமல்ல கடவுளும் கூட அவர்களை மன்னிக்க மாட்டார்” என குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், சிறை தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து அவரது உடல் எடையில் எவ்வித மாற்றமும் இல்லை என சிறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சிறை தரப்பில் வெளியான தகவலின்படி, அவர் சிறைக்கு அழைத்து வரப்பட்டபோது 55 கிலோ இருந்துள்ளார், அதில் இப்போது எவ்வித மாற்றமும் இல்லை. அவரின் ரத்த சர்க்கரை அளவும் இயல்பாக உள்ளது. அவர் காலையில் யோகா மற்றும் தியானம் செய்கிறார். சிறையிலேயே நடைபயிற்சியும் மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்படுகிறது.