உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் (வயது 76), கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அவதியடைந்து வருகிறார். இதற்கிடையே, அவர் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றார். ஆனால், தனது உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் பெற்றார்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சிங்கப்பூரில் கடந்த 2022ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். லாலு பிரசாத், அரசியலில் ஆக்டிவாக இல்லாத நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளத்தை அவரது மகன் தேஜஸ்வி யாதவ் வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் தான், லாலு பிரசாத் டெல்லிக்குச் செல்வதற்காக பாட்னா விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரது உடல்நிலை திடீரென மோசமானதால், நேற்று பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு சிறுநீரக பிரச்சனை மட்டுமின்றி, இருதய பிரச்சனையும், வேறு சில உடல் உபாதைகளும் உள்ளன. தற்போது மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.