காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55 அடியை கடந்துள்ளது.
நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பொழியவில்லை. பல ஆண்டுகளில் இல்லாத வறட்சி என்று கூறி தண்ணீர் தர மறுக்கிறது கர்நாடக அரசு. நீர் வரத்து குறைந்து போனதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 35 அடியை எட்டியது. இதையடுத்து, காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் பங்கு தண்ணீரை கர்நாடகா தர மறுத்தாலும் வருண பகவான் கருணையினால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 20 அடி உயர்ந்து தற்போது 55 அடியாக உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8,000 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து, அதிகரித்து 14,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6.498 கனஅடியில் இருந்து 7,563 கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 8,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. மாலை நேரத்தில் பெய்த கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐவர்பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதேபோல் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 6,498 கனஅடியில் இருந்து 7,563 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 54.55 அடியில் இருந்து 54.85 அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 21.50 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு 250 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை நீடித்தால் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.