அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுகுழுவை எதிர்த்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் செல்லாது எனவும், ஜூன் 25ஆம் தேதிக்கு முன்னர் அதிமுகவில் இருந்த நிலையே நீடிக்கும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, ஓபிஎஸ் தரப்புக்கு தொண்டர்கள் மிகுந்த ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்ததோடு, அதிமுகவில் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் அறிவித்தார். இதேபோல், சமீபத்தில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேலும் பலருக்கு தனித்தனியே அழைப்பு விடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. தீர்ப்பு எவ்வாறாக வந்தாலும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு தேவை என்பதை உணர்ந்த ஓ.பன்னீர்செல்வம், ஆதரவாளர்களை தன் பக்கம் இழுக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். மேலும், தேனி பெரியகுளத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் சில நிர்வாகிகளோடு தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.