மத்தியப்பிரதேச மாநிலம் பெடல் மாவட்டம் போர்தேஹி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின்னாளில் அந்த இளைஞரை பிடிக்காமல் போனது. இதனால், அந்த இளம்பெண் வேறு ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் சேர்ந்து அடிக்கடி ஊர் சுற்றி வந்துள்ளனர். இதனைப் பார்த்து முன்னாள் காதலன் ஆத்திரமடைந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த இளைஞர் பெண்ணின் புது காதலனிடம் சென்று தன்னை பற்றி எடுத்துச் சொல்லி தான் பெண்ணுடன் பழகியதை எல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். இதனால், இருவருக்கும் குழப்பம் ஏற்பட்டு, இரண்டு பேரில் யாரை உண்மையாக காதலிக்கிறாய் என்று அந்த பெண்ணிடமே கேட்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, இரண்டு இளைஞர்களும் தங்களின் நண்பர்களை அழைத்துக் கொண்டு கையில் கம்பு, ஆயுதத்துடன் அந்த பெண்ணை சுற்றி வளைத்துள்ளனர்.

இதனை சற்றும் எதிர்பாராத இளம்பெண், அதிர்ச்சியில் திகைத்துள்ளார். அப்போது இரண்டு பேரில் யாரை உண்மையாக காதலிக்கிறாய் என்று சொல் என கேட்டுள்ளனர். அதற்கு அவரால் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்துள்ளார். இதனால், இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை அடித்து தாக்கியுள்ளனர். வலி தாங்க முடியாமல் ஓட்டம் பிடித்த அந்த பெண், திடீரென அருகில் இருந்து கிணற்றில் குதித்துள்ளார். இதை பார்த்ததும் பதறிப்போன அந்த இரண்டு இளைஞர்களும் தப்பியோடிவிட்டனர். பின்னர், அங்கிருந்தவர்கள் கிணற்றுக்குள் குதித்து பெண்ணை மீட்டனர். இதையடுத்து, அந்த பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.