கோவையைச் சேர்ந்த பிரபல மத போதகர் ஜான் ஜெபராஜ் அவரது வீட்டில் வைத்து இரு சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் மத போதகர் ஜான் ஜெபராஜ் தலைமறைவான நிலையில், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வெளி நாடு தப்பி செல்லாமல் இருக்க கோவை மாநகர காவல் துறை சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
‘லுக் அவுட் நோட்டீஸ்’ என்றால் என்ன? இது யாரால், எதற்காக வழங்கப்படுகிறது? உள்ளிட்ட பிற விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
லுக் அவுட் நோட்டீஸ் என்றால் என்ன? இந்தியாவில் சட்ட ஒழுங்கை பராமரிக்க காவல் மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அதில் ஒரு முக்கியமான பாதுகாப்பு உத்தியாகும் ‘லுக் அவுட் நோட்டீஸ்’.Look Out Notice என்பது, குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்ட நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க பயன்படுகிறது. இது, Look Out Circular (LOC) என்றும் அழைக்கப்படுகிறது.
லுக் அவுட் நோட்டீஸ் என்பது, விமான நிலையம், துறைமுகம், நில எல்லைகள் போன்ற இடங்களில் பாதுகாப்பு அதிகாரிகள் பயன்படுத்தும் எச்சரிக்கை அறிவிப்பாகும். குற்றச்சாட்டுகள் நிலவியிருக்கும்போது, விசாரணைக்காக தேவைப்படும் நபர் ஒளிந்து கொண்டிருந்தால் அல்லது வெளிநாடு செல்லும் முயற்சியில் இருந்தால், இந்த நோட்டீசின் அடிப்படையில் அவர் தடுக்கப்படுவார்.
யாரால் வழங்கப்படுகிறது? இந்த நோட்டீஸ் பெரும்பாலும் காவல் துறை, சிபிஐ, இடி (ED), வருமானவரி துறை, நர்கோட்டிக்ஸ் கன்ட்ரோல் ஆகிய அமைப்புகளின் கோரிக்கைப்படி வெளியிடப்படுகிறது. இதை இந்திய குடிநுழைவு துறை (Bureau of Immigration) பராமரிக்கிறது. குற்றவாளி அல்லது சந்தேகநபரின் பெயர், பிறந்த தேதி, பாஸ்போர்ட் எண் போன்ற தகவல்கள் இதில் இடம்பெறும்.லுக் அவுட் நோட்டீஸ் என்பது சட்டரீதியான வழக்குரைஞர் நடவடிக்கையல்ல, ஆனால் நிர்வாக அடிப்படையிலான ஒரு முக்கிய உத்தியாகும். சில சந்தர்ப்பங்களில், நீதிமன்ற உத்தரவை அடிப்படையாகக் கொண்டு இது வழங்கப்படும்.
எதற்காக வழங்கப்படுகிறது? இந்த நோட்டீஸ் மூலமாக ஒருவர் வெளிநாடு செல்லும் முன் விமான நிலையத்திலேயே அவரைத் தடுத்து வைக்க முடியும். இது, குற்றவாளிகள் சட்டத்தை மீறி தப்பிச் செல்லும் முயற்சியை கட்டுப்படுத்துகிறது. லுக் அவுட் நோட்டீஸ் என்பது இந்தியாவில் சட்ட ஒழுங்கை பராமரிக்க, குற்றவாளிகளை கண்காணிக்க, மற்றும் விசாரணையை எளிதாக்க, பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பாதுகாப்பு உத்தியாக இருக்கிறது.
Read more: “உங்கள் மொபைல் இணைப்பு துண்டிக்கப்படும்!” மோசடி அழைப்புகளை நம்பாதீர்கள்..!! – TRAI எச்சரிக்கை