இந்தியா என்ற பெயரை மாற்றுவது தொடர்பான விவகாரத்தில், எதிர்க்கட்சிகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில், “இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்திகள் மட்டுமே. இந்த செய்திகள் ’பாரத்’ என்ற பெயரைப் பற்றிய எதிர்க்கட்சிகளின் மனநிலையை தெளிவாகக் காட்டுகிறது. அரசின் அழைப்பிதழ்களில் பாரதம் என குறிப்பிடப்படுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை.
நான் பாரத அரசின் அமைச்சர். பாரதம் என்ற பெயரையே விரும்பாத இவர்கள் யார்? இவர்கள் ஏன் பாரதத்தை எதிர்க்க வேண்டும்? இப்போதெல்லாம் பாரதம் என்று குறிப்பிட்டால் கூட வலியை உணர ஆரம்பித்து விட்டீர்களா? தேசத்தின் முன் கட்சியை வைத்து அரசியல் என்ற புதைமணலில் சிக்கியவர்கள் இவர்கள்தான் பாரதத்தை எதிர்க்கிறார்கள்.
10 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், எதிர்க்கட்சிகள்தான் தங்கள் கூட்டணியை UPA என்று அழைப்பதை நிறுத்திவிட்டன. பெயரை மாற்றுவதால் உங்கள் செயல்கள் மாறாது. இந்த ஊழல் கூட்டணி, ஆணவம் நிறைந்த கூட்டணியை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது” என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விமர்சித்துள்ளார்.