மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள தாதிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவரது கணவர் தியான் சிங் ராத்தோட். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஜோதி பக்கத்து வீட்டில் வசிக்கும் உதய் என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இவர்கள் இருவரும் அடிக்கடி வெளியே செல்லுவதும் நெருக்கமாக இருப்பதையும் வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி ஜோதி வீட்டில் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அனைவரும் அவரவர் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது, உதய், ஜோதியை செல்போனில் தொடர்பு கொண்டு மாடிக்கு வரும்படி அழைத்துள்ளார். உடனே ஜோதியும் மாடிக்கு சென்றிருக்கிறார். ஜோதியை பின்தொடர்ந்து அவரது மகனும் மாடிக்கு வந்திருந்தான். அங்கு ஜோதி மற்றும் உதய் ஆகியோரை பார்த்துக் கொண்டிருந்தான்.
மகன் வந்ததை அறிந்த ஜோதி அதிர்ச்சியில் உறைந்தார். இதனை வீட்டில் யாரிடமாவது சொல்லிவிடுவான் என்ற பயத்தில் மகனை மாடியில் இருந்து கீழே தூக்கிப் போட்டுள்ளார். இதையடுத்து, சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தனது மகனை ஜோதி கொலை செய்தார் என்பதை யாருக்கும் சொல்லாமல் இருந்துள்ளார். அப்போது, மகன் இறந்த பிறகு ஜோதியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது.
எப்போதும் தன்னுடைய மகனின் ஆவி வீட்டைசுற்றி வருவதாகவே சொல்லிக் கொண்டே இருந்தார். இதனால் அவருக்கு ஒருவித பயம் ஏற்பட்டது. அடிக்கடி மகன் கனவில் வருவதாக, கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். மனைவியின் நடத்தையில் ரத்தோடுக்கு சந்தேகம் வந்தது. ஒரு கட்டத்தில், மகனை நான் கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை என்று கூறி தன்னுடைய கணவரிடம் நடந்த உண்மையை அப்படியே தெரிவித்தார் ஜோதி. இந்த சம்பவம் தொடர்பாக கணவர் புகார் அளித்ததை அடுத்து, ஜோதியை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.