கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் பல் மருத்துவமனையை திறந்து வைத்தப் பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சபாநாயகர் அப்பாவு, “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளது குறித்த கேள்விக்கு, ரூ. 10 லட்சம் இல்லை.. 20 லட்சம் வேண்டுமானாலும் முதல்வர் கொடுப்பார். கொள்கை முடிவு எடுப்பது முதல்வரின் முடிவு. அதில் யாரும் தலையிட முடியாது
அதிமுக-வினர் சட்டசபையில் பேசுவது சிக்கல் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பிரச்சனையோ தெரியவில்லை. நாங்கள் அவர்களும் உள்ளே இருந்து கருத்தை கூற வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், அவர்கள் வெளிநடப்பு செய்துவிடுகின்றனர். அதி முக்கிய பிரச்சனைகளை அதிமுகவினர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். வரும் காலங்களில் அவர்கள் அதிக நேரம் அமர்ந்து சட்டசபையில் பேச வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு, ஆங்காங்கே நடக்கும் சில கொலைகளை சுட்டிக்காட்டி அரசுக்கு எதிராக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் நடப்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனை. ஆனால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்றார்.