நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி, சட்டப்பேரவை தேர்தலிலும் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலையில் வகிப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆனால், ஆம் ஆத்மி இந்த அளவுக்கு பின்னடைவைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தால், அது தேசத்திற்கான ஒரு பின்னடைவாகத் தான் கருத வேண்டும்.
நியாயமான முறையில் டெல்லி தேர்தல் நடந்துள்ளதா..? என்ற சந்தேகம் எழுகிறது. இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. காங்கிரஸும், ஆம் ஆத்மியும் ஒற்றுமையாக தேர்தலைச் சந்திக்கவில்லை. இந்தியா கூட்டணி தலைவர்கள் இதுகுறித்து தீவிரமாக ஆலோசிக்க வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஈகோ பிரச்சனையைத் தள்ளி வைத்துவிட்டு மக்களைக் காப்பாற்றுவதற்கான திசை வழியில் சிந்திக்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி, சட்டப்பேரவை தேர்தலிலும் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருக்க வேண்டும். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இதுகுறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அதேபோல், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை திமுக மிக அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. எதிர்பார்த்த வெற்றியை திமுக கூட்டணி பெறும்” என்று தெரிவித்துள்ளார்.