பொது போக்குவரத்தில் பேருந்துகளை விட ரயிலில் தான் டிக்கெட் விலை மிக குறைவாக உள்ளது. ஏன் இவ்வளவு விலை வித்தியாசம்? என்ற முழு விபரங்களை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்…
மார்டன் உலகில் இன்று உலகமே சுருங்கிவிட்டது எனலாம். இன்று இந்தியாவில் இருக்கும் நபர் அடுத்த சில மணி நேரங்களில் உலகின் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் செல்லலாம். அந்த வகையில், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல சைக்கிள் முதல் பைக் கார் பேருந்து, ரயில், விமானம், என போக்குவரத்து என்பது நம் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

பொது போக்குவரத்தை ஒப்பிடும் போது இருப்பதிலேயே விமானத்தில் தான் டிக்கெட் விலை அதிகம். அடுத்ததாக பேருந்து. அதுக்கும் அடுத்ததாக ரயிலில் தான் விலை குறைவு. மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்தில் விலை அதிகமாக இருக்கிறது. ஆனால் அதிக பொருட்செலவில் இயக்கப்படும் ரயில்களில் விலை குறைவாக இருக்கிறது என்பது பலருக்குப் புரியாத புதிராக இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை பேருந்துகளில் குறைந்தது ஒரு கி.மீக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான விலையில் டிக்கெட் இல்லை. ஆனால் ரயில்களில் ஒரு கி.மீ பயணத்திற்கு ஒரு ரூபாய்க்கும் கீழ் டிக்கெட்கள் விற்பனையாகிறது.
ஏன் இந்த வேறுபாடு என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படுகிறது. ஒரு பொது வாகனத்தைச் செயல்படுத்துவதற்கு எவ்வளவு செலவாகிறது என முதலில் கணக்கிடப்படும். செலவு என்றால் அதற்கான எரிபொருள் செலவு அதைச் செயல்படுத்தத் தேவைப்படும் ஆட்களுக்கான சம்பளம், டோல்கேட் கட்டணம் உள்ளிட்ட ஒரு பயணத்திற்கு ஆகும் செலவு. இது போக மொத்த செலவுகளாக வரும் வாகனத்தின் பராமரிப்பு, ரிப்பேர், இன்சூரன்ஸ், உள்ளிட்ட செலவில் குறிப்பிட்ட பயணத்திற்கான பங்கு, அதன்பின் லாபம் என ஒரு வாகனம் ஒரு இடத்திலிருந்து கிளம்பி மற்றொரு இடத்திற்குச் செல்ல எவ்வளவு செலவாகிறது என கணக்கிடப்பட்டு அது ஒரு பயண தூரத்தில் ஸ்டேஜ் வாரியாக பிரிக்கப்பட்டு, அதில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அவர்களுக்குத் தலைக்குக் குறிப்பிட்ட தூரத்திற்குக் கட்டணம் இவ்வளவு என நிர்ணயம் செய்யப்படுகிறது
இந்த முறையில் பார்த்தால் பேருந்தை விட ரயிலை இயக்குவதற்கு அதிகம் செலவாகும். ஆனால் ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதனால் செலவு, லாபம் எல்லாம் அதிகமான எண்ணிக்கையில் பிரிக்கப்படும் போது டிக்கெட்டின் விலை குறைவாக வருகிறது.
இது வழக்கமான டிக்கெட்களுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யும் முறை தான். ஆனால் இன்று பல பேருந்துகள், விமானங்கள், தனியார் வசம் உள்ளன. எனவே தேவைக்கு ஏற்றவாறு டிக்கெட் விலையை ஏற்றுவதும் இறக்குவதுமாய் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.