தமிழக வெற்றிக் கழக தலைவர் பதவி குறித்து அக்கட்சியின் சட்ட விதிகள் என்ன சொல்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து விஜய், பணியாற்றி வருவதால் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகிகள் நியமனம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தவெகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் மக்களை நேரடியாக சென்று சந்திக்க விஜய் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், தவெகவின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் செயல்பட்டு வருகிறார். ஐபேக் நிறுவனம் மூலம் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார் பிரசாந்த் கிஷோர். 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு இவரது நிறுவனம் எந்தவொரு கட்சிக்கும் தேர்தல் வியூக பணிகளில் ஈடுபடவில்லை.
இதையடுத்து, கட்சியில் 28 பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பட்டியல் வெளியாகி பெரும் விவாத பொருளாக மாறியது. இந்நிலையில் தான், தவெகவில் இடம்பெற்றிருக்கும் தலைவர் பதவியை தேர்ந்தெடுக்கும் முறை குறித்தும், அவர்களுக்கான அதிகாரம் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் பதவி குறித்து அக்கட்சியின் சட்ட விதிகள் என்ன சொல்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
➥ தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் நிறுவன உறுப்பினராக 4 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
➥ அடிப்படை உறுப்பினர்கள் மூலமாக மட்டுமே தவெகவின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
➥ மாவட்ட அல்லது மாநில அளவில் 4 ஆண்டுகள் நிர்வாகியாக பணியாற்றியிருக்க வேண்டும்.
➥ 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைவர் பதவிக்கான உட்கட்சி தேர்தல் நடைபெறும்.
➥ தலைவர் பதவி விலகும் பட்சத்தில், உடனடியாக பொதுக்குழு கூடி இடைக்கால தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
➥ அவசரத் தேவை கருதி தலைவருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு என்றாலும் அடுத்து நடைபெறும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும்.
➥ தவெகவின் அனைத்து விதமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களுக்கும் தலைவரே பொறுப்பாளராக இருப்பார்.
➥ கட்சிக்காக வாங்கப்படும் அல்லது விற்கப்படும் சொத்துக்கள் மற்றும் பரிவர்த்தனைகள் தலைவர் பெயரில் மட்டுமே நடைபெறும்.
➥ தேர்தல், வேட்பாளர் தேர்வு, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து விதமான கோப்புகளில் கையெழுத்திடும் அதிகாரம் தலைவருக்கு மட்டுமே உண்டு.