சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தடகள சங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக வெளியாகியுள்ள அழைப்பிதழ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 2-வது மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டி துவக்க விழா நாளை நடைபெறவுள்ளது. கரூர் தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ள இந்த விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதன்ம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருப்பதாக அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.
அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, குளித்தலை எம்.எல்.ஏ இரா.மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துறை வழங்க இருப்பதாக அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். தொடர்ந்து அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அவர் எப்படி நாளை நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த அழைப்பிதழை பகிர்ந்து எதிர்க்கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருக்கிறது தமிழ்நாடு தடகள சங்கம். குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அழைத்ததே தவறு என்கிற நிலையில், அந்த மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளரையே மற்றொரு சிறப்பழைப்பாளராக அழைத்திருப்பது ஆட்சியில் இருப்பவர்களின் அதிகார ஆணவத்தை வெளிப்படுத்துகிறது.
இனி சிறையில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளை முக்கிய பிரமுகர்களாக உருவகப்படுத்த இந்த நிகழ்ச்சி தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். தமிழக காவல்துறை தலைவர் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை இந்த நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என உத்தரவிட வேண்டும். முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் திரு.வால்டர் தேவாரம் இந்த தடகள சங்கத்தின் தலைவர். முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் இந்த சங்கத்தின் துணை தலைவர். சிறையில் இருக்கிற ஒருவர் வர முடியாது என்று தெரிந்தும் அவர் வருவதாக பதிவிட்டிருப்பது குறித்து அவர்களுக்கு தெரியவில்லை என்றால், இந்த தவறை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது தெரிந்தே அனுமதித்துள்ளார்கள் என்றால் தமிழகத்தின் அரசியல் அவலத்தை உணர்த்துவதோடு, அவர்களின் தலைமை பண்பையும் கேள்விக்குறியாக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.