தமிழ்நாட்டில் தற்போது வெயில் காலம் முடிவடைந்து மழைக்காலம் துவங்கி உள்ளது. கூடவே, பல மழைக்கால நோய்களும் ஏற்பட துவங்கி இருக்கிறது. அதிகம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் டெங்கு ஆபத்தில் உள்ளனர். சிலருக்கு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்த வைரஸ் ஏடிஸ் கொசுக்களால் அதிகம் பரவுகிறது. இதற்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்து கொண்டால் சரி செய்துவிடலாம். ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் முதலில் உடல் வெப்பநிலை பல மடங்கு உயரும்.
என்ன செய்ய வேண்டும்..?
மழைக்காலத்தில் கொசுக்கள் உங்களை கடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் போது கொசு கடிக்காமல் இருக்க கிரீம்களை தடவி கொள்ளலாம். வீட்டில் இருக்கும் போது குறிப்பாக மாலை வேளையில் வீட்டில் புகைமூட்டம் போடலாம். மேலும் கொசுக்கடிப்பதை தடுக்க முழு உடலையும் மறைக்கும் அளவிற்கு ஆடைகளை அணியலாம். இதன் மூலம் ஓரளவுக்கு கொசு கடிப்பதை தடுக்க முடியும். குறிப்பாக, மழை காலத்தில் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இவற்றில் தான் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகிறது. உடலை நீரேற்றமாக வைத்து கொள்வது எந்தவித பாதிப்புகளில் இருந்தும் தடுக்க உதவும். மழைக்காலத்தில் திடீர் காய்ச்சல், தலைவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.
டெங்கு காய்ச்சலுக்கு செய்ய கூடாதவை :
இந்த சமயத்தில் காய்ச்சல் அல்லது தலைவலி ஏற்பட்டால் மருத்துவரின் அறிவுரைகள் இல்லாமல் எந்தவித மருந்துகளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. சில மருந்துகள் டெங்குவின் அறிகுறிகளை மோசமாக்கும். இந்த சமயத்தில் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இவை டெங்கு நோயாளிகளுக்கு இரத்தப்போக்கு மற்றும் பிற பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும். உடல் வலி மற்றும் காய்ச்சல் அதிகம் இருந்தால் ஓய்வு எடுங்கள். கடுமையான வேலைகளை செய்ய வேண்டாம். கொசு அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும். வீட்டின் பின்புறம் அல்லது மழை நீர் தேங்கும் இடங்களுக்கு செல்ல வேண்டாம்.
Read More : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47-வது முறையாக நீட்டிப்பு..!! நீதிபதி அல்லி பரபரப்பு உத்தரவு..!!