fbpx

Candidate: உங்க தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்…?

மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான 18-வது மக்களவைத் தேர்தலில், முதல் கட்டமாக இன்று நடைபெறவுள்ள தேர்தலுக்கு வாக்காளர்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

முதல் கட்ட தேர்தல் குறித்த விவரங்கள்: இன்று 102 மக்களவைத் தொகுதிகளுக்கு (பொது – 73, எஸ்சி -18, எஸ்டி – 11) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்துடன் அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு 92 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அனைத்துக் கட்டங்களையும் விட அதிகப்பட்சமான தொகுதிகளை முதல் கட்டம் கொண்டுள்ளது. வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும் (வாக்குப்பதிவு நிறைவடையும் நேரம், தொகுதிக்கேற்ப மாறுபடலாம்.

1.87 லட்சம் வாக்குச்சாவடிகளில் 16.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 18 லட்சத்துக்கும் அதிகமான தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாக்காளர்களில் 8.4 கோடி பேர் ஆண்கள். 8.23 கோடி பேர் பெண்கள். 11,371 பேர் மூன்றாம் பாலினத்தினர். முதல் முறை வாக்காளர்களாக 35.67 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். மேலும் 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களாக 3.51 கோடி இளம் வாக்காளர்கள் உள்ளனர். போட்டியில், 1625 (ஆண்கள் 1491, பெண்கள் 134) வேட்பாளர்கள் உள்ளனர்.

வாக்குச்சாவடி அலுவலர்கள், பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்காக 41 ஹெலிகாப்டர்கள், 84 சிறப்பு ரயில்கள் , சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அமைதியாகவும் சுமூகமாகவும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உறுதியானநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேர்தல் நடைமுறைகள் பாதுகாப்பானதாக இருப்பதற்கு வாக்குச் சாவடிகளில் போதிய அளவு மத்தியப் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும், நுண் பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு 50%க்கும் அதிகமான வாக்குச் சாவடிகளில் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. 361 பார்வையாளர்கள் (127 பொதுப்பார்வையாளர்கள், 67 காவல் துறை பார்வையாளர்கள், 167 செலவினப் பார்வையாளர்கள்) ஏற்கனவே அவரவர் தொகுதிகளுக்கு சென்றுள்ளனர். இவர்கள் தீவிர கண்காணிப்புடன் தேர்தல் ஆணையத்தின் கண்களாகவும், காதுகளாகவும் செயல்படுவார்கள். சில மாநிலங்களில் சிறப்புப் பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்காளர்கள் எந்த வகையிலும் திசை திருப்பப் படாமல் கண்டிப்பாகவும், விரைந்தும் செயல்படுவதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் கண்காணிப்பதற்கு 4,627 பறக்கும் படைகளும், 5208 நிலைக்கண்காணிப்புக் குழுக்களும், 2028 வீடியோ கண்காணிப்புக் குழுக்களும், 1255 வீடியோ பார்வையிடல் குழுக்களும் செயல்படும். சட்டவிரோதமாக மதுபானங்கள், போதைப்பொருள்கள், பணம், இலவசப் பொருட்கள், கொண்டுவரப்படாமல் கண்காணிப்பதற்கு மாநிலங்களுக்கு இடையே 1,374 சோதனைச் சாவடிகளும், சர்வதேச எல்லையில் 162 சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கடல் மற்றும் வான் பாதைகளிலும், கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

85 வயதுக்கு மேற்பட்ட, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்க முடிவு செய்தால் அவர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்து வாக்களித்த பின் வீட்டில் கொண்டுவிடுவதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதே போல் மாற்றுத்திறனாளிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சைகை மொழி மற்றும் ப்ரெய்லி எழுத்து முறையைப் பயன்படுத்தி வாக்களிக்கவும் உதவியாளர்களைப் பெற்றுக் கொள்வதற்கும் வகை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் சாக்ஷம் செயலி மூலம் சக்கர நாற்காலி வசதியையும் பெற்றுக் கொள்ள முடியும்.

அனைத்து வாக்காளர்களும் சிரமமின்றி வாக்களிக்க குடிநீர், கூடாரம், கழிப்பறை, சாய்வு தளம் போன்ற அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 5,000-க்கும் அதிகமான வாக்குச் சாவடிகள், பாதுகாப்பு ஊழியர்கள் உட்பட முற்றிலுமாக பெண்களாலேயே நிர்வகிக்கப்பட உள்ளன. 1000-க்கும் அதிகமான வாக்குச் சாவடிகள், மாற்றுத்திறனாளிகளால் நிர்வகிக்கப்படும். பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் வந்து வாக்களிக்க வேண்டும் என்பதற்கு ஆணையத்தின் அழைப்பாகவும், இது இருக்கும்.

வாக்காளர்கள் தங்களின் வாக்குச் சாவடி விவரம், தேர்தல் தேதி போன்றவற்றை https://electoralsearch.eci.gov.in/ என்ற இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தவறான தகவல்களை தவிர்க்கவும், அனைத்துவிதமான கேள்விகளுக்கும் தெளிவான விளக்கங்களைப் பெற, தேர்தல் ஆணையத்தின் உண்மையும் கற்பிதமும் என்ற பதிவேட்டை https://mythvsreality.eci.gov.in/ என்ற இணைப்பின் மூலம் பயன்படுத்தலாம். வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், கல்வி விவரம், குற்றப்பின்னணி பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள அவர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை https://affidavit.gov.in/ என்ற இணைப்பின் மூலம் காணலாம்.

Vignesh

Next Post

முதல்முறை ஓட்டு போடபோறீங்களா..? கட்டாயம் இதையெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கோங்க..!

Fri Apr 19 , 2024
இன்று ஓட்டுபோட போகும்போது இதையெல்லாம் கண்டிப்பாக ஃபாலோ பண்ணுங்க..! நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று தொடங்குகிறது. வாக்களிப்பது என்பது ஒரு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். எனவே முதல்முறை வாக்களிக்கும்போது, ஒரு வாக்காளராக நீங்கள் இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வாக்காளர்கள் தாங்கள் வசிக்கும் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா […]

You May Like