கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் காலமானார். பின்னர், அந்த தொகுதியில் மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். ஆனால், டிசம்பர் 14ஆம் தேதி உடல்நலக்குறைவால் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மேற்கண்ட தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதனால், அங்கு உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளனர். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கும் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் வடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாங்கள் எந்த தேர்தலாக இருந்தாலும், இடைத்தேர்தலாக இருந்தாலும் போட்டியிடாமல் இருந்ததில்லை. ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும்” என்று அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், “திராவிட கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ளவர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக எதுவும் பேச முடிவதில்லை. கூட்டணி கட்சிகளின் குரல்வளைகளை திராவிட கட்சிகள் நெருக்கி விட்டது. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட விவகாரத்தில் கூட்டணி கட்சியினரால் குரல் கொடுக்க முடியவில்லை” என்று விமர்சித்தார்.