கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி முடிவடைகிறது.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கோடை வெயில் சுட்டெரிக்கும். அப்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலும் 24 நாட்கள் இருக்கும். இதனால், கோடை வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். ஏற்கனவே சேலம், மதுரை, சென்னை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட இடங்களில் இயல்பை காட்டிலும் வெப்பம் அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது.
இதற்கிடையே, கோடை வெயிலின் போது ஆங்காங்கே குளிர்விக்கும் வகையில், மழையும் பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே பல இடங்களில் 2 முதல் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தாண்டு அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி முதல் மே 28ஆம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் வெயில் வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி அதிகமாகவே இருக்கும்.
அக்னி நட்சத்திரத்தின்போது மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். பழச்சாறுகள், குளிர்பானங்கள் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் அவசியமின்றி, வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மாலை 4 மணிக்கு மேல் வெளியே செல்லலாம். கடந்த முறை அக்னி வெயில் தொடங்கியதும் ஓரிரு நாட்களில் மழை பெய்து வெப்பம் தணிந்தது. ஆனால், இந்த முறை அது போல் நிகழும் என்பது போக போகத்தான் தெரியும்.