சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ”அண்ணன் விஜய் எப்போது அரசியக்கு வருவார்?” என்ற கேள்வியை மகளிர் அணி நிர்வாகிகள் திரும்பத் திரும்ப எழுப்பியதால், அதை ”உங்க அண்ணன்கிட்டயே கேளுங்க, என்னை வம்பில் மாட்டிவிடாதீங்கம்மா” என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார் புஸ்ஸி ஆனந்த். நானும் உங்களை போல அதற்காக தான் காத்திருக்கிறேன். ”I am Waiting” என்று கூறி நழுவிக்கொண்டார்.
விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற ஒரு கேள்வியை மட்டும் தன்னிடம் கேட்க வேண்டாம் என்றும் அதனை விஜய்யிடமே நீங்கள் நேரடியாக கேட்டுக்கொள்ளுங்கள் எனவும் மகளிர் அணி நிர்வாகிகளிடம் புஸ்ஸி ஆனந்த் கூறினார். விஜயை அண்ணனாக தாங்கள் பார்ப்பதாகவும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் தங்கள் ஓட்டு விஜய்க்கு தான் எனவும் மகளிர் அணி நிர்வாகிகள் கூறினர். நடிகர் விஜய் எம்.ஜி.ஆர். இடத்தை பிடித்துவிட்டார் என்றும் வேறு யாருடைய பட்டத்துக்கும் ஆசைப்படாதவர் விஜய் எனவும் மகளிர் அணி நிர்வாகிகள் பேசினர்.