தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரபேல் வாட்ச் விலை தான் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது அதெற்கேற்றார் போல் திமுகவினரும் இதை விடுவதாக தெரியவில்லை, அதிலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த ரபேல் வாட்ச்சின் பில் இருக்கா இல்லையா என்று கேட்டு நாளுக்கு நாள் கலாய்த்து வருகிறார்.
தூத்துக்குடியில், பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா, மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக சட்ட மன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன் பால கணபதி, ஆகியோர் கலந்து கொண்டு பெண்களுக்கு தையல் மிஷின், மற்றும் சேலைகளை வழங்கினர்.
பிறகு பேசிய பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, தலைவர் அண்ணாமலை 24 மணி நேரமும் மக்களுக்காக உழைத்து கொண்டிருக்கிறார், அவரை பற்றி பேச திமுகவினருக்கு தகுதி இல்லை. மேலும் ஒருமையில் பேசும் பழக்கம் பாஜகவிற்கு இல்லை என்றார்.
அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்கள் மேடையில் ஏறுவோம் என பொது கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியுள்ளார். இந்நிலையில் அதற்கு பதிலடி அளித்த சசிகலா புஷ்பா, “நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது நாக்கு இருக்காது” என ஆவேசமாக பேசினார். ஒருமையில் பேசமாட்டோம் என்று கூறி, கொலை மிரட்டல் விடும் அளவிற்கு அமைச்சரை பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா பேசி இருப்பது தற்போது வைரலாகியுள்ளது.