தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கலங்கல் இந்திரா காலனியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கனகராஜ் (25). கருத்தானூரை சேர்ந்த மங்கள்ராஜ் மகள் கவிக்குயில் (22). இவர் கனகராஜின் சொந்த அத்தை மகள் ஆவார். கனகராஜுக்கும் கவிக்குயிலுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் ஊருக்கு வெளிப்புறம் உள்ள தோட்டத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மனைவி கவிக்குயில் திருமணத்திற்கு முன்னர் மலையான்குளத்தை சேர்ந்த வெங்கடேஷ் (24) என்பவரை காதலித்து வந்துள்ளார். தனக்கு திருமணம் ஆன பிறகும், தொடர்ந்து பழகி வந்துள்ளார் கவிக்குயில், இந்த பழக்கம் நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், நேற்று கணவர் கனகராஜ் வேலைக்கு செல்லும் நேரத்தில் வெங்கடேஷை வீட்டிற்கு அழைத்து கவிக்குயில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை பார்த்த கனகராஜின் தந்தை நடராஜன் அதிர்ச்சியடைந்து இருவரையும் கண்டித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவம் அறிந்து கனகராஜ் வீட்டிற்கு வந்தார். இதனைத் தொடர்ந்து கவிக்குயிலின் அம்மா முத்துமாரி (50), அண்ணன் அன்பரசு (25) ஆகியோரும் அங்கு வந்தனர். அப்போது வெங்கடேஷை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே அங்கு இருந்த அரிவாளை கொண்டு வெங்கடேஷை அன்பரசு சரமாரியாக வெட்டினார். இதில், வெங்கடேஷின் இடது கை மணிக்கட்டு துண்டாக வெட்டுப்பட்டு கீழே விழுந்தது. மேலும் விரல்கள், முகம் ஆகியவற்றில் வெட்டிவிட்டு அன்பரசு மற்றும் கனகராஜ் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
தனது காதலன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்ட கனகராஜின் மனைவி கவிக்குயில் அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது கிணற்றில் தண்ணீர் இருந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு சங்கரன்கோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கனகராஜ், அன்பரசு, நடராஜன் மற்றும் முத்துமாரி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். திருமணம் முடிந்த தனது முன்னாள் காதலியை சந்தித்து தனிமையில் இருந்த நிலையில், காதலியின் கணவர் அவரை சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.