“நேரம் வரும் போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வேன்” என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது. பொதுக்கூட்டம் நடந்த அதேசமயம், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நடைபெற்றது. இதில், உச்சநீதிமன்ற தீர்ப்பில் அதிமுக தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்படுவதாக உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிகலா, ”அண்ணாவின் பாதையில் எங்கள் பயணம் தொடரும் என்றும், நேரம் வரும் போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் என்றும் தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒன்றாக இணைந்து நல்ல வெற்றியை பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். திமுக அரசு சொன்னதை செய்யவில்லை என்று குற்றம்சாட்டியதோடு, ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக நிறுத்துவது நல்லதல்ல” என்றும் கூறினார்.