ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் அவிழ்க்கும் போது உரிமையாளர் பெயரோடு சாதி பெயரை குறிப்பிடக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற உத்தரவிட கோரி மதுரையை சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளையின் உரிமையாளர் பெயர் வாசிக்கப்படும். அப்பொழுது குறிப்பிட்ட சாதியின் பெயர்களை சொல்லி காளை அவிழ்த்து விடப்படுகிறது. இவ்வாறு செய்யக்கூடாது என 2019ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால், அதனை பின்பற்றுவதில்லை அந்த உத்தரவை முறையாக பின்பற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேபோல் ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பிக்கும் முன் தீண்டாமை உறுதிமொழி எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார். இதையடுத்து, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “உயர்நீதிமன்ற தீர்ப்பை முறையாக பின்பற்றுவோம்” என உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, “சாதி பெயர் சொல்லி காளை அவிழ்க்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தொடங்கும் முன்பாக தீண்டாமை உறுதிமொழி எடுப்பது குறித்த மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்க வேண்டும்” என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.