இந்தாண்டில் தென்மேற்கு பருவமழை 3 நாள் தாமதமாக, ஜூன் 4ஆம் தேதி துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவமழை குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “வழக்கமாக தென்மேற்கு பருவமழை, கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி துவங்கி, செப்டம்பர் மாதம் வரை பெய்யும். இந்தாண்டில், 3 நாட்கள் தாமதமாக, ஜூன் 4ஆம் தேதி பருவமழை துவங்க வாய்ப்புள்ளது. கடந்தாண்டில், மே 29ஆம் தேதியே பருவமழை துவங்கியது. 2021ஆம் ஆண்டில் ஜூன் 3ஆம் தேதியும், 2020ல் ஜூன் 1ஆம் தேதியும் பருவமழை துவங்கியது. ஒரு சில நாட்கள் தாமதமாகவோ, முன் கூட்டியோ மழை துவங்குவது என்பது வழக்கமானது தான்” என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாட்டில் பெய்யும் மொத்த மழை அளவில், 80 சதவீதம் தென்மேற்கு பருவமழை வாயிலாகவே கிடைக்கிறது. விவசாயத்திற்கும் தென்மேற்கு பருவமழை முக்கிய பங்காற்றுகிறது. நாட்டின் மொத்த விவசாய உற்பத்தியில் பெரும் பகுதி இந்த மழைக் காலத்தை நம்பியே உள்ளது. இந்த மழைப் பொழிவு குறைந்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு, நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.