ஆன்லைனில் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்யும் போது, குறிப்பிட்ட நிறுவனங்கள் நிமிடங்களில் டெலிவரி செய்வதாகச் சொல்லி காலாவதியான பொருட்களை அனுப்பவது, தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் செயல்படுவதும் தொடர்ந்து வருகிறது. இதுபற்றி அதிகபடியான புகார்கள் எழுந்த போதும் தொடர்ந்து குளறுபடிகள் நடந்தே வருகின்றன. அப்படி, நிதின் அரோரா என்பவர் Blinkit தளத்தில் தான் ஆர்டர் செய்த பிரட் பாக்கெட்டிற்குள் உயிருடன் எலி நெளிந்துக் கொண்டிருப்பதை வீடியோவாக எடுத்து தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில், “ப்ளின்கிட் சேவையில் மிகவும் விரும்பத்தகாத அனுபவம் கிடைத்திருக்கிறது. கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஆர்டர் செய்த பிரட் பாக்கெட்டில் உயிரோடு இருக்கும் எலி இருந்திருக்கிறது. இது நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை மணியென்றே நினைக்க வேண்டியுள்ளது. 10 நிமிடங்களில் டெலிவரி செய்வதில் இத்தனை குளறுபடிகளும், பொறுப்பின்மையும் இருந்தால், நான் மணிக்கணக்கில் வரிசையில் நின்றே வாங்கிக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளதோடு, பிளின்கிட் கஸ்டமர் கேரில் புகார் தெரிவித்ததையும் பகிர்ந்திருக்கிறார் நிதின் அரோரா. இவரின் பதிவை கண்ட பிளின்கிட் நிறுவனம், “இது போன்ற மோசமான அனுபவத்தை நீங்கள் பெற வேண்டுமென நாங்கள் நினைத்ததில்லை. உங்களுடைய விவரங்களை தெரிவியுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளது. நிதினின் இந்த பதிவு வைரலாகவே பல இணையவாசிகளும் பிளின்கிட்டின் தரமற்ற சேவையால் தங்களது நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.