மதுரையில் 9 ஏக்கர் நிலம் வாங்க சீமானுக்கும் அவரது மனைவிக்கும் பணம் எங்கிருந்து வந்தது என வீரலட்சுமி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு ஒரு எண்டு கார்டே இல்லையா என்பதை போல், சீமான் – வீரலட்சுமி இடையேயான பஞ்சாயத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஓடிக்கொண்டிருக்கிறது. சீமானை ஸ்கெட்ச் போட்டு தூக்குவேன் என வீரலட்சுமி பேசியதும் பதிலுக்கு ஸ்கெட்ச் பேனாவை வாங்கிக் கொண்டு போய் வீரலட்சுமியிடம் கொடுத்து ஸ்கெட்ச் போட்டு தூக்குங்க என நாம் தமிழர் நிர்வாகிகள் கலாய்த்ததும அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், சீமானின் நிலம் தொடர்பான ஆவணங்களுடன் புதிய வீடியோ ஒன்றை வீரலட்சுமி வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். அந்த வீடியோவில், ”பிச்சை எடுத்துத் தான் சீமான் கட்சி நடத்துறாரு என்கிறார்கள். அப்படியிருக்கும் போது மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வில்வப்பட்டி கிராமத்திலும், சத்திரம் தொண்டைமான் பட்டி கிராமத்தில் உள்ள 6 ஏக்கர் நிலம் ஒன்றும், 3 ஏக்கர் நிலம் ஒன்றும் தனித்தனியாக சீமான் கயல்விழி பெயருக்கு எப்படி வந்தது என வீரலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் 2015இல் தான் இந்த நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மொத்தம் 9 ஏக்கர் நிலம் வாங்க சீமானுக்கு பணம் எங்கிருந்து வந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கு இதனை சீமான் தெளிவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே, பிச்சை எடுத்துத் தான் கட்சி நடத்துவதாக சீமான் பேசிய ஆடியோவையும், ரீசார்ஜ் செய்யக்கூட சீமான் எவ்வளவு சிரமப்படுகிறார் என்பது தங்களுக்குத் தான் தெரியும் என சாட்டை துரைமுருகன் பேசிய ஆடியோவையும் வீரலட்சுமி வெளியிட்டுள்ளார்.
வீரலட்சுமி முன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும், புகார்களுக்கும் விளக்கமும், பதிலடியும் கொடுத்து வந்த சீமான் ஒரு கட்டத்தில் வீரலட்சுமிக்கு பதிலடி கொடுப்பதையே நிறுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நிலம் தொடர்பான வீரலட்சுமியின் கேள்விக்கும் சீமான் நேரடியாக பதிலளிக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.