தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, வரைபடத்துடன் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பத்திரப்பதிவுத்துறையில் நாள்தோறும் ஏராளமானோர் பத்திரப்பதிவுத்துற செய்து வருகின்றனர். மேலும், பொதுமக்களின் வசதிக்காக ஏராளமான திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில், வழிகாட்டி மதிப்பு என்பது அரசாங்கத்தின்படி, பதிவு செய்யக்கூடிய குறைந்தபட்ச சொத்து மதிப்பாகும். வழிகாட்டி மதிப்பை பொறுத்தவரை, தற்போதுள்ள வழிகாட்டி மதிப்பில் இருந்து 10% அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள நிலங்களுக்கு தனித்தனி சர்வே நம்பர், உட்பிரிவு எண்கள் உள்ளன. அதன்படி, தெரு, சர்வே எண் வாரியாக நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பை பதிவுத்துறை நிர்ணயம் செய்துள்ளது. மேலும், தெரு மற்றும் சர்வே எண் அடிப்படையில், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த மதிப்புகள் பட்டியல் வடிவில் வெளியிடப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கூகுளில் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.
ஒரு சர்வே எண்ணுக்கான நிலம் எங்கே உள்ளது என்பதை கூகுளில் மேப்பில் அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, இதற்காக TNGSI எனப்படும் தமிழக புவியிட தகவல் அமைப்புடன் இணைந்து, அதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாகவும், இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் கூறப்படுகிறது. சர்வே நம்பருக்கான நிலம் எங்கு உள்ளது என்பதை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ள தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.