தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் திருவிழா இப்போதே களைக்கட்ட துவங்கியிருக்கிறது. அந்த வகையில், இன்று பாஜக கூட்டணி குறித்து இன்று அமித்ஷா முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி மலரும் என்று கூறப்படுகிறது. அதற்கேற்ப எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். அமித்ஷா உடனான சந்திப்பின் போது, அண்ணாமலையை மாற்றினால் தான் கூட்டணியில் இணைவோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக தெரிகிறது. இதனால், பாஜக தலைவரை மாற்றுவதற்கான வேலையை டெல்லி தலைமை துவங்கியிருக்கிறது.
இந்நிலையில், நேற்றிரவு 10.30 மணியளவில் மத்திய உள்துறை அமித்ஷா தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள அவர், இன்று காலை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இல்லத்துக்கு சென்று அவரை சந்திக்கவுள்ளார்.
பின்னர், பின்னர் மீண்டும் நட்சத்திர ஓட்டலுக்கு திரும்பும் அமித்ஷா, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழக பாஜக தலைவர் குறித்தும், கூட்டணி குறித்தும் ஆலோசிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக செயல் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது, சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக, பாமக இணைவது உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.