கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் கிராமத்தில் கடந்த பதினெட்டாம் தேதி 300க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து அதில் 200க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவால் வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்த நிலையில் கள்ளக்குறிச்சிக்கு எந்த வழியாக மெத்தனால் விநியோகம் செய்யப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், முக்கிய குற்றவாளியாக சின்னதுரை கைது செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக மாதேஷ் என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் சென்னை புறநகர் பகுதியில் இருந்து சிலரிடம் மெத்தனால் வாங்கியதும், அதில் சிவா என்ற சிவகுமார் என்பவர் மொத்தமாக மெத்தனாலை வாங்கி வந்து பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்ததும் இவருக்கு துணையாக பண்ருட்டி சக்திவேல் மற்றும் மீன் வியாபாரி கண்ணன் ஆகியோர் ஆகிய இருவரும் பல்வேறு இடங்களுக்கு இவற்றை சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, மாதேஷிடம் சிபிசிஐடி போலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மாதேஷ் டிப்ளமோ கெமிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்து, இரண்டு மாதம் மட்டுமே கல்லூரிக்கு சென்றவர். அதன் பின்னர் சின்னதுரையிடம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
தான் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர் என்பதால், மெத்தனாலை எளிதாக வாங்கி தர முடியும் என சின்னதுரையிடம் கூறியுள்ளார் மாதேஷ். மேலும் சாராயத்தில் மெத்தனால் கலந்தால், கூடுதல் போதை கிடைக்கும் என சின்னதுரையிடம் கூறியுள்ளார். பின்னர் சென்னையை சேர்ந்த சிவகுமாரின் அறிமுகம் கிடைத்த நிலையில் அவர் மூலமாக 3 பேரல் மெத்தனால் வாங்கியுள்ளார் மாதேஷ். இது தவிர ஏற்கனவே 6 பேரல்கள் மெத்தனால் அவரிடம் இருந்துள்ளன.
அந்த 9 பேரல் மெத்தனாலையும் சக்திவேலிடம் தந்துள்ளார் மாதேஷ். அவரிடம் இருந்து கதிர் என்பவர் மூலம், ஜோசப் ராஜா, சின்னதுரை, ஷாகுல் ஹமிது ஆகியோரின் கைக்கு சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 3 பேரல் மெத்தனால் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மாதேஷையும், சின்னதுரையையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர். .