காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த 2022ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை நடத்தினார். 2022 செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி அவர் தனது யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என அவரது பாதயாத்திரை தொடர்ந்தது.
தெலங்கானாவில் பொனாலு பண்டிகையில் பங்கேற்று கொண்ட ராகுல்காந்தி, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். ராகுல் காந்தி சாட்டையால் அடிக்கும் போது தொண்டர்கள் அனைவரும் சத்தம் போட்டனர். இதுதொடர்பான வீடியோ அப்போது சமூக வலைதளங்களில் படு வைரலானது.
இந்நிலையில், இந்த சம்பவம் நடைபெற்று 2 ஆண்டுகள் கடந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சாட்டையால் அடித்துக் கொண்டார். 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்ளப்போவதாக கூறியிருந்த அவர், 8 முறை அடித்துக் கொண்டார். 9-வது முறை அடிக்கும் போது, அங்கிருந்தவர்கள் அண்ணாமலையை கட்டிப் பிடித்து தடுத்தனர். தற்போது, இந்த சம்பவம் தமிழக அரசியல் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், ராகுல் காந்தியை அண்ணாமலை பின்பற்றுகிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.