தொடர் மழை காரணமாக அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் நேற்றிரவு 4 மணி நேரத்தில் சராசரியாக 6.7 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக கொளத்தூரில் 62.4 மி.மீ, அம்பத்தூரில் 54.3 மி.மீ அளவு மழை பதிவாகியிருந்தது. இதனால், தாழ்வான இடங்களில் மழை நீர் புகுந்தது. குறிப்பாக, முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் வீடுகளுக்குள் மழைநீர் தேங்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனடியாக களத்திற்கு சென்று பணியாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இந்த உத்தரவை அடுத்து கொளத்தூரில் அமைச்சர் சேகர்பாபு உட்பட திமுக நிர்வாகிகள் பலர் களமிறங்கினர். சென்னையின் மற்ற பகுதிகளில் மேயர் பிரியா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் நேரில் ஆய்வு செய்து தேங்கிய நீர் சரியான முறையில் வெளியேற்றப்படுவதை உறுதி செய்தனர்.
இந்நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும், மழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.