மக்களவைத் தேர்தல் 2024-ன் 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மத்தியப் பிரதேசத்தின் பேட்டுல் (எஸ்டி) தொகுதியில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்களும் இதில் அடங்குவர். மேலும் குஜராத்தின் சூரத் தொகுதியில் ஒரு வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த 12 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் வேட்பு மனுக்களைத் திரும்ப பெற 2024, ஏப்ரல் 22 கடைசி தேதியாக இருந்தது.
3-ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.
மத்தியப் பிரதேச மாநிலம் குணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராவ் யாத்வேந்திர சிங்கை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா போட்டியிடுகிறார். அவர் பாஜகவின் முக்கிய தலைவர் மற்றும் குவாலியர் சமஸ்தானத்தின் கடைசி மகாராஜாவான ஜிவாஜிராவ் சிந்தியாவின் பேரன் ஆவார்.
பல்லவி டெம்போ தெற்கு கோவா லோக்சபா தொகுதியின் பாஜக வேட்பாளராக உள்ளார், அவருக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் விரியாடோ பெர்னாண்டஸ் போட்டியிட்ட உள்ளார். மக்களவைத் தேர்தலில் கோவாவில் போட்டியிடும் பாஜகவின் முதல் பெண்மணி டெம்போ. அவர் ஒரு தொழில்முனைவோர், கல்வியாளர் மற்றும் டெம்போ இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனர் ஆவார்.
ஷிமோகா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளார் கே.எஸ்.ஈஸ்வரப்பா. இதே தொகுதியில் பாஜகவின் பி.ஒய்.ராகவேந்திரா மற்றும் காங்கிரஸ் தலைவர் கீதா சிவராஜ்குமாரை எதிர்த்து போட்டியிடுகிறார். கே.எஸ்.ஈஸ்வரப்பா கர்நாடகாவின் முன்னாள் பாஜக தலைவர் மற்றும் முதலமைச்சராவார்.
கர்நாடகாவின் ஹாவேரி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் தலைவர் ஆனந்தசுவாமி கட்டதேவரா மடத்தை எதிர்த்து போட்டியிடுகிறார். பொம்மை, பாஜகவின் முக்கிய தலைவர் கர்நாடக முன்னாள் முதல்வர் ஆவார்.
தார்வாட் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் வினோத் அசூட்டியை எதிர்த்து பாஜக சார்பில் பிரகலாத் ஜோஷி போட்டியிடுகிறார். 2019 முதல், ஜோஷி நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் ஆகியவற்றின் மத்திய அமைச்சராக இருந்து வருகிறார்.